முன்னாள் ஜனாதிபதிகளுக்கான முப்படை பாதுகாப்பு இன்று முதல் வாபஸ்


முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டிருந்த முப்படையினரை இன்று (23) முதல் உத்தியோகபூர்வமாக விலக்கிக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் பாராளுமன்ற அமர்வின் போது பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பிற்காக நிறுத்தப்பட்டிருந்த முப்படையினரை திரும்பப் பெறுவதற்கான தீர்மானத்தை விளக்கினார்.

அதன்படி இன்று முதல் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு பொலிஸ் அதிகாரிகள் மாத்திரமே பாதுகாப்பு வழங்கவுள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டிருந்த பொலிஸ் அதிகாரிகளின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் போதிய எண்ணிக்கையிலான அதிகாரிகள் தொடர்ந்தும் பணியில் இருப்பார்கள் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

மேலும், முன்னாள் ஜனாதிபதிகளுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை மீளாய்வு செய்யப்பட்டு, தேவையான மேலதிக நடவடிக்கைகள் அமுல்படுத்தப்படும் என அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.

முப்படை வீரர்கள் திரும்பப் பெறப்பட்ட போதிலும், முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் என பாதுகாப்பு அமைச்சு உறுதியளித்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பை பராமரிப்பதில் அதிக செலவுகள் ஏற்படுவதால், அவர்களின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் எண்ணிக்கையை குறைக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
புதியது பழையவை