தற்போது திருகோணமலை நிர்வாக மாவட்டத்தின் மாவட்ட செயலாளராக கடமையாற்றும் இலங்கை நிர்வாக சேவையின் விசேட தர அதிகாரி சமிந்த ஹெட்டியாராச்சி ஓய்வூதிய திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஓய்வூதிய திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக கடமையாற்றும் ஏ.ஜெகத் டி.டயஸின் பதவிக்காலம் 2024 டிசெம்பர் 31ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளதாகவும், குறித்த பதவிக்கு 2025 ஜனவரி 01ஆம் திகதி முதல் பொருத்தமான அதிகாரியொருவர் நியமிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
சமிந்த ஹெட்டியாராச்சி மேற்படி பதவிக்கு நியமிக்கப்படுவதற்கு பொருத்தமானவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இதன்படி, 2025 ஜனவரி 01 ஆம் திகதி முதல் ஓய்வூதியப் பணிப்பாளர் நாயகமாக அவரை நியமிப்பதற்கு பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.