ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் (SLMC) நிசாம் காரியப்பரின் பெயரைச் சேர்க்காமல் சமகி ஜன பலவேகய (SJB) தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்களை சமர்பிப்பதைத் தடுக்கும் வகையில் கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
SLMC தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தாக்கல் செய்த மனுவை பரிசீலித்த கொழும்பு மேலதிக மாவட்ட நீதிபதி சாமரி வீரசூரிய, SJB இன் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவுக்கு இந்த உத்தரவை பிறப்பித்தார்.
மனுதாரர் ரவூப் ஹக்கீம், 2024 ஜனாதிபதித் தேர்தலின் போது, SLMC, SJBயின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்ததாகக் கூறுகிறார்.
2024 பொதுத் தேர்தலின் போது, தனது கட்சி அக்டோபர் 10 ஆம் தேதி பொதுத் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக SJB உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் (MOU) செய்துகொண்டதாகவும் அவர் கூறினார்.
இதன்படி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் நிசாம் காரியப்பரை தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்க SJB இணங்கியதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, SJB எத்தனை தேசியப்பட்டியல் ஆசனங்களைப் பெற்றிருந்தாலும், அதில் ஒன்றை SLMC க்கு வழங்குவதற்கு அது கடமைப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
எஞ்சிய நான்கு தேசியப்பட்டியல் ஆசனங்களுக்கான பெயர்களை SJB இன் பொதுச் செயலாளர் சமர்ப்பிக்கத் தவறிவிட்டார் என்றும், இது தமது கட்சியுடன் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையை மீறும் செயலாகும் என தீர்ப்பளிக்குமாறும் ரவூப் ஹக்கீம் மேலும் கோரியுள்ளார்.